Our Feeds


Monday, February 27, 2023

Anonymous

மக்கள் போராட்டம் வெகுவிரைவில் தோற்றம் பெறும் - ஜனாதிபதிக்கு SLPP, MP ஜீ.எல் பீரீஸ் எச்சரிக்கை!

 



(இராஜதுரை ஹஷான்)


மார்ச் 19ம் திகதி 339 உள்ளூராட்சிமன்றங்களும் கலைக்கப்படும். மாகாண சபை தேர்தலுக்கு நேர்ந்த கதியே உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கும் நேரிடும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி மக்களின் அடிப்படை உரிமைகளான வாக்குரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜனநாயகத்திற்கான மக்கள் போராட்டம் வெகுவிரைவில் தோற்றம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளான வாக்குரிமை,ஒன்று கூடும் உரிமை,போராட்டத்தில் ஈடுபடும் உரிமைகள் தற்போது மறுக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் முன்னொரு போதும் இடம்பெறவில்லை. நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மலினப்படுத்தும் உரிமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடையாது.

அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டில் எவ்வித பிரச்சினையும் தோற்றம் பெறாது,மக்களும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்பினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்த வேண்டுமா, இல்லையா என்பதை மக்களால் புறக்கணிக்கப்பட்ட தனி நபர் தீர்மானிக்கும் முறையற்ற நிலை தற்போது காணப்படுகிறது.

நாட்டில் தற்போது ஜனநாயகம் என்பதொன்று கிடையாது.ஜனநாயகத்தின் அடிப்படை இலட்சினையான தேர்தலை பிற்போட்டு நாட்டில் ஜனநாயகத்தை ஒருபோதும் பாதுகாக்க முடியாது.

தேர்தல் இல்லாமல் அரச நிர்வாகம் நிர்வகிக்கப்படுமாயின் நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு அடிமைகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள்.

நாட்டு மக்களின் நிர்வாகத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை.பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரி அதிகரிப்பு ஊடாக மக்கள் மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த எவ்வித வழியும் தற்போது கிடையாது.

தேர்தலை நடத்த நிதி இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும் ,தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு கடப்பாடு இல்லை,தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கம் படுதோல்வி அடையும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார்.

தேர்தலை நடத்தமாட்டேன்,அச்சம் கொள்ள வேண்டாம் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி செயற்படுகிறார்.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி வழங்க முடியாது என திறைச்சேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன குறிப்பிட்டுள்ளதால் இலங்கை மக்களின் ஜனநாயக வாக்குரிமை தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா அல்லது பிற்போடப்படுமா என சர்ச்சை காணப்படும் நிலையில் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி 339 (காலி மாவட்டம் எல்பிடிய உள்ளூராட்சிமன்றம் தவிர ) உள்ளூராட்சிமன்றங்களும் கலைக்கப்படும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபை தேர்தலுக்கு ஏற்படுத்திய நிலைமையை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கும் தோற்றுவிக்க முறையற்ற வகையில் செயற்படுகிறார்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்.இலங்கை ஜனநாயக நாடா என்ற சந்தேகம் காணப்படுகிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »