Our Feeds


Tuesday, February 28, 2023

Anonymous

PHOTOS: பாடசாலை அதிபரை இடம் மாற்றாதே : கொட்டும் மழையில் வீதிக்கு வந்து போராடிய பெற்றோர்கள்!

 



நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்


சம்மாந்துறை கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம். மஹிஷா பானு இடமாற்றம் செய்யப்பட்டதாக பரவிய செய்தியை அடுத்து பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று பாடசாலை முன்றலில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 


பல்வேறு அநாகரிக விடயங்கள் இடம்பெற்று வந்த இப்பாடசாலையை பொறுப்பேற்று திறன்பட நிர்வாகித்து வந்த அதிபரை கடமை செய்ய விடாமல் ஒரு கும்பல் தடுத்து வருவதாகவும், தொடர்ந்தும் இடையூறுகளை செய்து வருவதாகவும் தெரிவித்த பெற்றோர்கள் கொட்டும் மழையில் நனைந்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் மற்றும் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் சம்மாந்துறை பொலிஸார் அங்கு கூடியிருந்த  பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 


பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்களாக கடந்த காலங்களில் இருந்த சிலர் தொடர்ந்தும் பாடசாலையை கொண்டு செல்ல முடியாதவகையில் இடைஞ்சல் செய்வதாகவும் அவர்களின் 09 பிள்ளைகளுக்காக எங்களின் 165க்கு மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த பெற்றோர்கள் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுமின்றி போராட்டம் நடத்தினர். பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டால் நாங்கள் எங்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என்று வாதிட்டனர். 


தொடர்ச்சியாக கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸார், பெற்றோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை காரணமாக தற்காலியமாக போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் களைந்து சென்றுள்ளனர். பாடசாலை அபிவிருத்தி குழு முன்னாள் உறுப்பினர்களின் தொல்லையான நடவடிக்கை காரணமாக பாடசாலை அதிபர் தனது சொந்த விருப்பில் இடமாற்றம் கோரியிருந்தும் மாகாண கல்வி உயரதிகாரிகள் அவ்விடமாற்றத்தை வழங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »