“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை. எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான பிரஜைகள் இல்லை. எமது பாதை உள்நோக்கிய பாதை. பிரிட்டன் இலங்கை அரசுடனான தமது நல்லுறவுகளை பயன்படுத்தி எமது இந்த இலங்கை கனவை நனவாக்க உதவ வேண்டும்.” என நேற்று கொழும்பில், வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது, பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், அரசியல் அலுவலர் ஜோவிடா அருளானாந்தம் மற்றும் தமுகூ தலைவர் மனோ கணேசன், இதொகா பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
பிரித்தானிய தரப்பினரிடம், மனோ எம்பி மேலும் கூறியதாவது,
“பிரித்தானியாவின் தார்மீக பொறுப்பு, பிரிட்டீஷ் அரசாட்சி, இம்மக்களை இருநூறு வருடங்களுக்கு முன்னர் தொடக்கம் தென்னிந்திய தமிழகத்திலிருந்து கொண்டு வர ஆரம்பித்ததுடன் ஆரம்பமாகிறது. அன்று முதல் எமது மக்கள், உலகம் கண்டிராத கடுமையான உழைப்பின் மூலம், இன்றுவரை மிகப்பெரிய ஏற்றுமதி தொழில் துறையாக இருக்கின்ற பெருந்தோட்டங்களையும், பெரும் நெடுஞ்சாலைகளையும், பாரிய ரயில் பாதைகளையும், கொழும்பு துறைமுகத்தையும் அமைத்து, அன்று சிலோன், இன்று ஸ்ரீலங்கா என்ற இலங்கையை உருவாக்கியுள்ளார்கள்.”
“இதற்கு பிரதியுபகாரமாக, நன்றிகெட்டத்தனமாக 1948ல் எமது மக்களின் குடியுரிமைதான் பறிக்கப்பட்டது. வாக்குரிமைதான் பறிக்கப்பட்டது. நமது மக்கள் பலவந்தமாக 1964ல் சிறிமா-சாஸ்திரி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்டார்கள். இது நடக்கும் போது, சிலோன் என்ற இலங்கை ஒரு பிரிட்டீஷ் ஆதிக்க நாடாக இருந்தது. 1972ல் குடியரசு ஆகும்வரை, இலங்கையில் பிரித்தானிய அரசாட்சிக்கு பதில் சொல்லும் மகாதேசாதிபதியே ஆட்சியில் இருந்தார். 1948ன் சோல்பரி அரசமைப்பின் 29ம் பிரிவும் எம்மை காப்பாற்றவில்லை. ஆகவே இன்றைய பிரிட்டீஷ் அரசரின் அரசாங்கம் இலங்கை மலையக தமிழரின் மீது பாரிய தார்மீக பொறுப்பையும், கடமையும் கொண்டுள்ளது.”
“இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் எமது பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை முழுமையாக விட்டு விட வேண்டாம். அது சரி வராது. இந்தியா ஏற்கனவே, இலங்கையுடனான தமது நட்புறவை எமது விஷயத்திலும் அவ்வப்போது பயன்படுத்துகிறது. ஆனால், அது எமக்கு போதாது. அவர்களுக்கு அவர்களது சொந்த தேசிய கரிசனைகள் அநேகம் உள்ளன. அவை எமது விஷயங்களை விட முன்னுரிமை கொண்டவை. எமக்கு அவை தெரியும்.”
“தேசிய நீரோட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படாத காரணத்தால், நாம் ஒதுக்கப்படுகிறோம். எமக்கு பிரிட்டீஷ் உதவியும் தேவை. பிரிபடாத ஒரே இலங்கைக்குள் எமது சமூக-அரசியல் அபிலாஷைகளை அடையவும், கடந்த காலங்களில் இழந்த உரிமைகளை பெறவும் நாம் பாடுபடுகிறோம்.
எமது மக்கள் ஜனதொகையில் மூன்றிலொன்றுக்கு குறைவில்லாத பிரிவினர் இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். ஒட்டுமொத்த இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினராக அவர்கள் இருக்கின்றார்கள். ஐநா மனித உரிமை ஆணையகத்தின் நவீன கொத்தடிமை தொடர்பிலான விசேட அறிக்கையாளர், ஐநா நிறுவனங்கள், உலக வங்கி, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவை முன்வைத்துள்ள கணிப்பீடுகளின்படி, இந்த துன்பகரமான உண்மைகள் உலகறிய செய்யப்பட்டுள்ளன. ஆகவே பிரிட்டீஷ் அரசு, விசேட ஒதுக்கீட்டு திட்டங்களின் அடிப்படையில் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிட வேண்டும்.”
“நாங்கள் இந்நாட்டில் முழுமையான பிரசைகள் ஆக உதவுங்கள். நம் நாட்டிற்கு நீங்கள் வாழ்வாதார உதவிகள் வழங்கும் போது, இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினரான, பெருந்தோட்ட பாமர மக்களுக்கு அவை கிடைகின்றனவா என கேள்வி எழுப்புங்கள். தேடுங்கள். எமக்காக இலங்கை அரசுடன் பேசுங்கள். நாம் இல்லாமல் இலங்கை முழுமையடையாது என்பது இனிமேல் மனதில் கொள்ளுங்கள்.”