ஜப்பானிய வணிகத் துறையில் முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி (Mitsubishi), இந்த நாட்டில் அதன் செயல்பாடுகளை மார்ச் மாதத்தில் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளது.
சாதகமற்ற சர்வதேச மதிப்பீடுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகியவை 60 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் நடவடிக்கைகளை நிறுத்த மிட்சுபிஷி தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் தற்காலிகமாக நிறுத்தியமை மற்றும் இலகு ரயில் திட்டம் மற்றும் இயற்கை திரவ எரிவாயு திட்டம் உள்ளிட்ட ஜப்பானின் புதிய திட்ட முன்மொழிவுகள் திடீரென இரத்து செய்யப்பட்டமையும் மிட்சுபிஷி நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு வழிவகுத்தது.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் பிரதான பங்காளியான Mitsubishi, ஏறக்குறைய 60 வருடங்களாக இலங்கையின் சில உட்கட்டமைப்பு திட்டங்களில் முக்கிய பங்குதாரராக இருந்தது.
அதன்படி, மிட்சுபிஷியின் கொழும்பு அலுவலகத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் Mitsubishiயினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அலுவலகங்களில் இலங்கையும் ஒன்றாகும், மேலும் Mitsubishi இலங்கையில் உள்ள பல நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு பங்களித்துள்ளது.