கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் சார்ஜன்ட் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (25) கைது செய்யப்பட்டிருந்தனர்.
போலியான பெயரில் டுபாய்க்கு செல்ல முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த நபர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர் கொலைகள் உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதால், வெளிநாடு செல்ல பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.