Our Feeds


Monday, February 20, 2023

Anonymous

சஜித் அரசியலுக்கு புதியவரல்ல. வங்குரோத்து அடைந்த அரசாங்கத்தின் பங்காளி. - நலிந்த ஜயதிஸ்ஸ JVP

 



(எம்.வை.எம்.சியாம்)


எதிர்வரும் தேர்தலில் அடையவுள்ள தோல்வியால் மனமுடைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அச்சமடைந்துள்ளதாகவும், மேலும் சஜித் என்பவர் ரணில் இல்லாமல் ரணிலின் கொள்கைகளை அமுல்படுத்தும் குழுவினர் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சஜித் அரசாங்கத்திடம் தேர்தலை நடத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் தேர்தலில் அடையவுள்ள தோல்வி தொடர்பில் அச்சமடைந்துள்ளார்.

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தேசிய மக்கள் சக்தி மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளார் என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

நடைபெறவுள்ள தேர்தல் வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும். முன்னதாக அரசாங்கத்தினர் தேர்தல் காலங்களில் கிராம மட்டங்களில் உள்ள மக்களிடம் சென்று தங்களுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளிப்பார்கள்.

இருப்பினும் இன்று இதற்கு தலைகீழாக இம்முறை தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் கடுமையாக செயற்பட்டு வருகிறது. 

தற்போது அதன் ஒரு அங்கமாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் மீது அரசாங்கத்தின் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இருப்பினும் அச்சகத்தினால் பாரியளவிலான தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன  என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று ரணில் தலைமையிலான மொட்டு அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. ராஜபக்ஷவை தொங்கிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தனித்தனியாக கூட்டுகளாக பிரிந்து சென்றிருந்தாலும், மக்கள் அவர்களை முற்றாக நிராகரித்துள்ளனர்.

சஜித் என்பவர் கூட அரசியலுக்கு புதியவரல்ல. வங்குரோத்து அடைந்த அரசாங்கத்தின் பங்காளி. 2015 முதல் 2019 ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவியை வகித்த ஒருவராவார். அவரின் கீழிருந்த எந்தவொரு திணைக்களமும் இலாபத்தை ஈட்டவில்லை. 

4 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது 20 மில்லியன் டொலரை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாக சரத் பென்சேகா கூறியிருந்தார்.

ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோர் நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு அமைச்சுகளை பொறுப்பேற்று அமைச்சர்களாக செயற்பட்டவர்கள். சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக பதவியேற்பதற்கு முன்னர் விமல் வீரவன்ச வீடமைப்பு அமைச்சராக செயல்பட்டவர். இருப்பினும், விமல் அமைச்சராக செயற்பட்ட போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கைகளையும் சஜித் பிரேமதாச எடுக்கவில்லை. 

திருடர் மூலம் திருடர் பாதுகாக்கப்பட்டார். பொருளாதாரத்தை கட்டியெழுப்பவில்லை. இந்த கும்பலின் சாயல் எவ்வாறு என்பது நாட்டு  மக்களுக்கு நன்றாக தெரியும். அன்று ரணிலின் வரவு - செலவு திட்டத்துக்கு ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தினார். 

சஜித் என்பவர் ரணில் இல்லாத ரணிலின் கொள்கைகளை அமுல்படுத்தக்கூடிய தரப்பை சேர்ந்தவர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »