(இராஜதுரை ஹஷான்)
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே ஆட்சி செய்யும். வன்முறையை அடிப்படையாக கொண்டு செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியமைத்தால் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படும் என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப் பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (11) இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.
தேர்தலை பிற்போடுவது,தேர்தலுக்கு இடையூறு விளைவிப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கை கிடையாது.
தேர்தலில் வெற்றி,தோல்வி என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தி அவர் நெருக்கடியான சூழலில் கூட தேர்தல்களை நடத்தியுள்ளார்.தவறான பிரசாரங்களால் நாட்டுக்கு உண்மையாக சேவை செய்தவர்களை வீழ்த்த முடியாது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் ஏற்படும் விளைவுகளை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
அரசியலமைப்பிற்கு அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.மக்களின் அடிப்படை உரிமை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரு பிரதான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி என்ற ரீதியில் தயாராக உள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அரச கட்டமைப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எதிர்வரும் இரு ஆண்டுகளுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே ஆட்சி செய்யும்.
முகப்பு புத்தக ஜனாதிபதியாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலம் வருகிறார்.
தற்போது ஜனநாயகம் மற்றும் தேர்தல் உரிமை தொடர்பில் அரசியல் பிரசாரம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணியின் பூர்வீகத்தை மூத்த தலைமுறையினர் நன்கு அறிவார்கள்.வன்முறையை அடிப்படையாக கொண்டு செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியமைத்தால் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படும் என்றார்.