தூக்கில் தொங்குவதற்கு கயிறு இல்லாமல் அரசியல் ரீதியாக ஆதரவற்ற நிலையில் இருந்த விமல் வீரவன்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கில் தொங்குவதற்கு கயிற்றை வழங்கியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஒருபோதும் நிறைவேற்ற முடியாத மாகாண சபை அதிகாரப் பகிர்வு குறித்த தலைப்பை முன்வைக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சியின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபை முறைமையை ஒருபோதும் முழுமையாக அமுல்படுத்த மாட்டார் எனவும் அதற்குப் பதிலாக சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி அரசியல் ரீதியாக தனது அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ளும் வியூக அரசியல் நடைமுறையை கையாண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தற்போதுள்ள மாகாணசபை முறைமைக்கு பதிலாக புதிய அதிகாரப் பகிர்வு வேலைத்திட்டம் தொடர்பில் தமது கட்சியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளமொன்ருக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.