உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்திற்கு உட்பட்டு நடத்த தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே உறுதியளித்துள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா இன்று (10) தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேர்தல் பணியை தொடர தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்தவொரு தடையும் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு கோரி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட எம்.பிக்கள் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்களை பரிசீலித்த போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.
நான்கு எம்.பிக்கள் சார்பாக ஜனாதிபதியின் சட்டத்தரணி லக்மினி வருசேவிதானவுடன் சஞ்சீவ ஜயவர்தனவும் ஆஜராகியிருந்தனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.