றிப்தி அலி
அல்குர்ஆன் மற்றும் ஹதீஸினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பினை அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் தொடர்ச்சியாக மீறி வருகின்றார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஊடாக தனிநபரொருவருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதை தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்ற ரவூப் ஹக்கீம், அவருடைய கட்சியின் யாப்பின் மூலம் தொடர்ச்சியாக அவருக்கான அதிகாரங்களை அதிகரித்து வருகின்றார்.
இதற்காக பேராளர் மாநாட்டில் தொடர்ச்சியாக கட்சியின் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு நடைபெற்றது.
இதன்போது, கட்சியின் யாப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் சுமார் 30 பதவி வழி உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற கட்சியின் அதியுயர் பீடக் கூடத்தில் சில நியமனங்களை கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.
இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம். நயீமுல்லாஹ் (ஹக்கீமின் மைத்துனர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்திற்கு கட்சியின் அதியுயர் பீடம் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியதாகவும், குறித்த நியமனங்களை அனுமதிப்பதற்கான யாப்புத் திருத்தம் அடுத்த பேராளர் மாநாட்டின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பின் பிரகாரம் அக்கட்சியின் பதவிகள் அனைத்தும் பேராளர் மாநாட்டுக்கு முன்னர் நடைபெறும் கட்டாய உயர் பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு பேராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்படுவது வழமையாகும்.
எனினும், குறித்த யாப்பு விதி மீறப்பட்டு, கட்சித் தலைவருக்குள்ள தன்னிச்சையான அதிகாரத்தின் ஊடாகவே புதிதாக மூன்று பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்றே, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்ட தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடத்திற்கும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எஸ். தௌபீக், அதியுயர் பீடத்தின் எந்தவித அனுமதியுமின்றி கட்சித் தலைவரினால் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, பிரதித் தலைவர்களாக நியமிக்கப்பட்ட மூன்று பேரும் இறுதியாக நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுமில்லை, அந்த பேராளர் மாநாட்டில் அதியுயர் பீட உறுப்பினர்களாக கட்சியின் தலைவரினால் அறிவிக்கப்படவுமில்லை.
இவ்வாறான நிலையில் அதியுயர் பீட உறுப்பனரல்லாத ஒருவரை எப்படி கட்சியின் பதவிநிலை உறுப்பினராக நியமிக்க முடியும் என்பதும் பாரிய கேள்விக்குறியாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மன்னிப்பு கடிதம் வழங்கினால் மாத்திரமே அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் என பேராளர் மாநாட்டில் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மன்னிப்புக் கடிதம் வழங்கியமை தொடர்பில் இன்று வரை எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவரை மீண்டும் பிரதித் தலைவர் பதவிக்கு உள்வாங்கியுள்ளமை பேராளர்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மறைவினை அடுத்து தலைவராக நியமிக்கப்பட்ட ரவூப் ஹக்கீமினால் கட்சியின் யாப்பில் பாரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தலைவரது கைகளில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
அஷ்ரபின் காலப் பகுதியில் சுமார் 10க்கு குறைவான பதவிகளும், சுமார் 30க்கு உட்பட்ட உயர் பீட உறுப்பினர்களுமே காணப்பட்டனர். ஆனால் ரவூப் ஹக்கீம் தலைவரானதன் பின்னர் 33 பதவிகள் உருவாக்கப்பட்டதுடன் அதியுயர் பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை 99ஆக அதிகரிக்கப்பட்டது.
இது போன்று அஷ்ரபின் காலத்தில் காணப்பட்ட இரண்டு பிரதித் தலைவர்கள் பதவி கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பேராளர் மாநாட்டில் மூன்றாகவும், அதன் பின்னர் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் நான்காகவும் அதிகரிக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் பிரதித் தலைவர்களின் எண்ணிக்கையினை ஏழாக அதிகரிக்க ரவூப் ஹக்கீம் முயற்சித்து வருகின்றார். இலங்கையிலுள்ள எந்தவொரு கட்சியிலும் ஏழு பிரதித் தலைவர்கள் இல்லாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸில் மாத்திரம் இந்த நியமனத்தினை மேற்கொண்டு முஸ்லிம் சமூகத்தில் பிழையான முன்னுதாரணமொன்றினை காட்ட ரவூப் ஹக்கீம் முயற்சிக்கின்றார்.
தனது பதவியினை தக்கவைத்துக் கொள்வதற்காகவே ரவூப் ஹக்கீம் இவ்வாறான நியமனங்களை தொடர்ச்சியாக மேற்கொள்வதாக அக்கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அது மாத்திரமல்லாமல், தனக்கு விருப்பமற்றவர்களை கட்சியிலிருந்து நீக்குவதும், விருப்பமானவர்களை கட்சிக்குள் உள்வாங்குவதுமே ரவூப் ஹக்கீமின் பணியாகும்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தான் மாத்திரமே செயற்பட வேண்டும் என்பது ரவூப் ஹக்கீமின் நிலைப்பாடாக இருப்பதை அவரின் செயற்பாடுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனாலேயே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியினை பொறுப்பேற்ற ஹாபீஸ் நசீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
கட்சித் தலைமையுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸிற்கு பல தடவைகள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியினை பொறுப்பேற்பதற்கான கோரிக்கைகள் அரசாங்கத்திடமிருந்து முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், குறித்த கோரிக்கையினை அவர் நிராகரித்துவிட்டார். இதனாலேயே அவர் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸிற்குள் உள்வாங்கப்பட்டது மாத்திரமல்லாமல், முன்னர் அவர் வகித்த பதவியும் வழங்கப்பட்டு அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் இல்லாமலாக்கப்பட்டது.
ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு எதிராக சதிகள் இடம்பெற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவருக்கு பக்க பலமாக நின்று ரவூப் ஹக்கீமின் தலைமைப் பதவியினை பாதுகாத்தவர் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
அப்படியானவர், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியினை பெற்றுக்கொண்டார் என்ற காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிந்து ஓரமாக்கப்பட்டமையினையும் இவ்விடத்தில் ஞாபகமூட்டுவது பொருத்தம்.
இவ்வாறு தொடர்ச்சியாக கட்சியின் யாப்பினை மீறி வருகின்ற ரவூப் ஹக்கீம், அவருடைய அரசியல் எதிராளிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசியலமைப்பினை மீறுகின்ற சமயங்களில் ஊடக அறிக்கைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கூக்குரலிடுவது எந்த வகையில் நியாயம்?- Vidivelli