ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில், தனது நாளைய (8) கொள்கை பிரகடன உரையில் குறிப்பிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது
ஏனைய சகோதர இன இலங்கை மக்களை பற்றியும் குறிப்பிடும் அதேவேளை இந்திய வம்சாவளி மலையக தமிழர்களையும் தேசியரீதியாக அங்கீரித்து செயலாற்ற வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளேன்.
இதே நிலைப்பாட்டையே இதொகாவும் கடைபிடிக்கிறது எனவும் நம்புகிறேன்.
எமது கருத்தை நான் எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் பலமுறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமே கூறியுள்ளேன்.
ஆகவே இப்போது பந்து ரணில் அரசு தரப்பில் இருக்கிறது. அதை நாம் எதிர் தரப்பில் இருந்தபடி கண்காணிக்கிறோம்.
இந்த அரசு அல்லது இந்த அரசு போய் வேறு எந்த இலங்கை அரசு வந்தாலும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும், இச்சமுகத்துக்குள் வரும் இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய பெருந்தோட்ட பிரிவினரின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்து பேசி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.
இந்நிலைப்பாட்டை அடைவதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நோக்கமாகும்.