துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியின் போது மீட்கப்பட்ட ஒரு சிறுவன் அங்கிருந்த மீட்பு படையினரை பார்த்து சிரித்தும் அடித்தும் விளையாடி மகிழ்ந்தான்.
துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பலர் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் அதிலிருந்து தப்ப முடியவில்லை. துருக்கி மட்டுமில்லாமல் சிரியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்த அளவுக்கோலில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் சிரியாவில் கடுமையான சேதம் ஏற்பட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டடங்களும் சரிந்து விழுந்தன. பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். துருக்கி நாட்டில் மட்டும் இதுவரை 12,931 பேர் பலியாகிவிட்டனர். அது போல் சிரியாவில் 2,992 பேர் பலியாகிவிட்டனர். நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு, நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு என இரு வேறு செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகின. அதை பார்க்கும் போது சிரியாவில் மிக மோசமான அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது தெரிகிறது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே அழுகுரல்கள், முனகல் சப்தங்கள் கேட்கின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் இடிபாடுகளில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஒரு குழந்தை உயிருடன் இருந்தது. அது மீட்கப்பட்டது. ஆனால் அந்த குழந்தையின் தாய், தந்தை இறந்துவிட்டனர். அது போல் மீட்பு பணியின் போது ஒரு இடிபாட்டில் சிறுமி ஒருவர் தனது தம்பியை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த காட்சி புலப்பட்டது. இந்த சம்பவத்தை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியுள்ளது. தைரியமான சிறுமி என கூறியுள்ளது.
17 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கிய தம்பியை தனது கைகளால் அணைத்து காப்பாற்றியுள்ளார் அந்த சிறுமி. மேலும் அந்த சிறுமி, தனது தம்பியை முதலில் காப்பாற்றுங்கள் என்றும் தான் என்ன கேட்டாலும் தருகிறேன் என்றும் வேலைக்காரர்களாக கூட இருக்க தயார் என்றும் அந்த சிறுமி கூறியதாக அங்கிருந்தோர் உருக்கமாக கூறினர். அது போல் பூனை, நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகளையும் மீட்பு படையினர் காப்பாற்றி 'கரை' சேர்க்கிறார்கள்.
அது போல் கைக் குழந்தைகள், சிறு குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், ஆண்கள் என அவ்வப்போது மீட்கப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் உயிருடனும் சில நேரங்களில் துரதிருஷ்டவசமாக சடலங்களாகவும் மீட்கப்படுகிறார்கள். தொடர்ந்து கட்டடங்கள் சிதறி சிதறி விழுவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடுபாடுகளில் இருந்து 2 வயது சிறுவன் மீட்கப்பட்டான். உயிருடன் மீட்கப்பட்டதில் அங்கிருந்த மீட்பு படையினர் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது அந்த சிறுவன் அழுவான் என நினைத்தனர். ஆனால் லேசான சிரித்த முகத்துடன் இருந்த சிறுவன் நன்றாக சிரித்தவாறும் மீட்பு படையினரை அடித்தவாறும் விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறுவனுக்கு முத்தம் கொடுத்தனர். சிரியாவின் அர்மனாஸ் பகுதியில் அந்த சிறுவன் மீட்கப்பட்டான். பேரிடர் குறித்தும் தனது தாய், தந்தையர் உயிருடன் இருக்கிறார்களா என்பது குறித்தும் அறியாத அந்த சிறுவன் சிரித்தது அங்கிருந்த மீட்பு படையினருக்கு உற்சாகத்தை கொடுத்தது.