இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞரணி தலைவர் கி. சேயோன், கட்சியில் தான் வகித்த பதவிகளில் இருந்து விலகிக்கொள்வதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கிருஷ்ணபிள்ளை சேயோன், கடந்த வாரம் கட்சித் தலைமைக்கும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் அனுப்பி வைத்த கடிதத்தில், கட்சியின் இளைஞரணி தலைமையை விட்டு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரான அவர், அண்மையில் நடந்த புதிய தவிசாளர் தெரிவு மற்றும் சில காரணங்களினால் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளரான அவருக்கு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசு கட்சி தலைமையை உரிய அங்கீகாரம் வழங்கவில்லையென்பதால் அதிருப்தியடைந்துள்ளதாக அறிய முடிகிறது.
கி. சேயோன் விடுத்த சில கோரிக்கைகளை, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தட்டிக்கழித்து வந்ததும் அதிருப்திக்கு காரணமென கூறப்படுகிறது. இந்த பின்னணியில், கட்சியின் இளைஞரணி தலைமை பதவியை துறப்பதாக கடந்த வாரம் கட்சித் தலைமைக்கு அறிவித்திருந்தார்.
கடந்த 4ம் திகதி முதல் கிழக்கு மாகாண சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நேற்று முன்தினம் சேயோனுடன் சமரச பேச்சில் ஈடுபட்டார். மட்டக்களப்பிற்கு சென்ற மாவை சேனாதிராசா, களுவாஞ்சிக்குடியிலுள்ள இரா. சாணக்கியனின் சொகுசு பங்களாவில் தங்கியுள்ளார். சுதந்திர தின குல்லா போராட்டத்திற்காக எம்.ஏ. சுமந்திரனும் மட்டக்களப்பு சென்று, அதே பங்களாவிலேயே தங்கியிருந்தார்.
மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், பொருளாளர் கனகசபாபதி உள்ளிட்டவர்கள் நேற்று முன்தினம் கி. சேயோனுடன் சமரச பேச்சில் ஈடுபட்டனர். தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அங்கு சேயோன் குறிப்பிட்டார். எனினும், இன்றுவரை அவர் கட்சி செயற்பாடுகளில் வழக்கம் போல ஈடுபடவில்லை.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழ் அரசு கட்சி தன்னிச்சையாக பிரிந்து சென்றதையடுத்து, கட்சிக்குள்ளும் பலத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.