Our Feeds


Wednesday, February 8, 2023

ShortNews Admin

ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - த.தே.கூ அறிவிப்பு.





(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு, அதனை விடுத்து செயற்ப்பட்டால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினார் என கருதப்படும்.

உரிமைகளுக்கான அஹிம்சை வழியில் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தொடர்ந்து ஊடகஙகளுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரையில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏகிய ராஜ்ய என்ற சொற்பதத்தை பாவித்துள்ளார். அது ஒற்றையாட்சி முறைமையை குறிக்குமாயின் அதனை முழுமையாக புறக்கணிப்போம்.

அதியுச்ச அதிகார பகிர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒற்றையாட்சி முறைமைக்குள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு சாத்தியமற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது சமஷ்டியாட்சி முறைமை தொடர்பில் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்  அதிகார பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன இருப்பினும் அது வெற்றிப்பெறவில்லை.

ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க கடந்த ஓரிரு மாதங்களில் அதிகார பகிர்வு தொடர்பில்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார் இருப்பினும் கொள்கை உரையில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிவிட்டார் என்று கருதுவோம்.

ஒரு நாடு என்ற சொற்பதத்துக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வோம், ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் தீர்வுக்கான அஹிம்சை வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »