(எம்.மனோசித்ரா)
தேர்தல் காலத்தில் நாட்டில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கான குறுகிய அரசியல் நோக்கங்களில் சில குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருகின்றன.
எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் தடையற்ற மின் விநியோகத்தை வழங்குவதற்கு மின் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்தில் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றமையை நானும் முற்றாக எதிர்க்கின்றேன். கடந்த ஆட்சி காலங்களில் பல ஆண்டுகளாக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் எடுக்கப்படாமையின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்படவிருந்த சாம்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவே கடந்த ஆண்டு 8 மணித்தியாலங்கள் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டது. அது அமைக்கப்பட்டிருந்தால் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கியிருக்க முடியும்.
எனவே தான் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து பல்வேறு கடினமான தீர்மானங்களை நாம் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம்.
தற்போது உயர்தர பரீட்சை காலத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்காமையின் காரணமாக எம்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் நாம் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தடையற்ற மின் விநியோகத்திற்கான திட்டமிடலை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கினோம்.
அமைச்சரவைக்கும் அந்த செயற்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த வருடத்தைப் போன்று நீர் மின் உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்தி விட்டால் மார்ச் , ஏப்ரலில் 5 மணித்தியால மின் துண்டிப்பிற்கு செல்ல நேரிடும். எனவே தான் தற்போது நாம் அதனை முகாமைத்துவம் செய்து கொண்டிருக்கின்றோம்.
மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாட்டில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு ஒரு சில குழுக்கள் முயற்சிக்கின்றன.
சில ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் கூட இந்த அரசியல் நோக்கங்களுக்கு துணை போகின்றனர். எவ்வாறிருப்பினும் கட்டணத்தை அதிகரித்தால் மாத்திரமே தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியும் என்றார்.