Our Feeds


Tuesday, February 14, 2023

SHAHNI RAMEES

குறைந்த வருமானம் பெறும் எந்தவொரு குடும்பத்தையும் தவறவிட வேண்டாம் ...!

 




குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி

பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக்கூடியது 20 பில்லியன் ரூபாவுக்காயினும் போதுமானளவு நெல்லை கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.


நெல் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொறிமுறை ஒன்றினூடாக அதனை குறைந்த வருமானம் பெறுவோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்-



உணவு பாதுகாப்பு வேலைதிட்டத்தின் கீழ் 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசியைப் பெற்றுக் கொடுப்பதற்காக 20 பில்லியன் ரூபா பெறுமதியான நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்கின்றோம். மேலும், உத்தரவாத விலையை வழங்குவதன் மூலம் நெல்லின் விலையை பாதுகாக்கவும் எதிர்பார்கின்றோம்.


இதில் முதல் கட்டம் நெல் கையிருப்புகளை கொள்வனவு செய்வதாகும். இப்பணி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அரிசியை விற்பதற்கு நடவடிக்கை எடுக்க மாட்டாது. வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு அரிசியை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வேலைதிட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக பல அமைச்சுக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.



எனினும், இதற்கென முழு நேரமும் செயற்படுவதற்காக குழு ஒன்று அவசியம். அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழுவை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.


ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை இதற்காக பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த வேலைதிட்டத்தை முடிவு செய்வதற்கு திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »