Our Feeds


Monday, February 13, 2023

SHAHNI RAMEES

பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஜனாதிபதி - விமல் வீரவன்ச

 


(இராஜதுரை ஹஷான்)



உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதாக


குறிப்பிட்டுக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்துகிறார்.



ஐக்கிய தேசிய கட்சியை தஞ்சமடையச் செய்யும் நிலை பொதுஜன பெரமுனவுக்கு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.



கடுவெல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை இடம்பெற்ற சுதந்திர மக்கள் சபை கூட்டணியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது,



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்மானத்தை கௌரவத்துடன் வரவேற்கிறோம். 



உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.



ஆனால், தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு நீதிமன்றம் அறிவிக்காது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.



நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை பறிக்க அரசாங்கம் முயற்சித்தபோது நீதிமன்றம் அதற்கு எதிராக தடை விதித்து மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாத்துள்ளது.



நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.



ஆனால், தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை வழங்க எதிர்பார்த்துள்ளதாக திறைசேரி செயலாளர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.



ஆகவே, திட்டமிட்ட வகையில் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும்.



தேர்தல் பிற்போடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.



ஆனால், தேர்தலை பிற்போடும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. மாறாக, தேர்தலை பிற்போடுவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்துகிறார்.



இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும். பஷில் ராஜபக்ஷவின் படுதோல்வியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.



பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.



பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 40 கோடி ரூபா செலவு செய்து 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட முடியுமாயின், ஏன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »