பொலன்னறுவை மணிக்கூட்டு கோபுர பகுதியில்
நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொலன்னறுவை நகர கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீதி தொடர்பான பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்னறுவை மாவட்ட செயலாளர் தம்மை அவரின் உத்தியோகபூர்வ காரில் ஏற்றி உரிய இடத்திற்கு அழைத்துச் சென்றதாக தாக்குதலுக்கு உள்ளான கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
பின்னர் குறித்த காணி பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு அவர் தனக்கு ஆலோசனை வழங்கிய போதிலும் தற்போது நிலவும் சட்டப்பிரச்சினையால் அதனை தீர்க்க முடியவில்லை என கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரச்சினையைத் தீர்த்துவிட்டு வந்த தன்னை மீண்டும் சந்திக்குமாறு அறிவுறுத்திவிட்டு மாவட்டச் செயலாளர் அவ்விடத்தை விட்டுச் சென்றதையடுத்து, ஒரு தரப்பினரால் தாக்கப்பட்டதாக கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறியிடம் வினவியபோது அவர் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்தார்.
இதேவேளை, மாவட்ட செயலாளரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலன்னறுவை தமன்கடுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார்.