Our Feeds


Saturday, February 4, 2023

SHAHNI RAMEES

மீண்டும் தைவான் எல்லையில் பதற்றம் : தைவானை அச்சுறுத்த போர் விமானங்களை அனுப்பிய சீனா

 

சீனா தைவானை தனது மாகாணங்களில் ஒன்றாகத்தான் கருதுகிறது. தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு சீனா துடிக்கிறது.



அப்படி இணைத்துக்கொண்டு விட்டால், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கும். இது அமெரிக்க இராணுவ தளங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே சீனாவின் கனவுக்கு அமெரிக்கா தடையாக இருக்கிறது. 



தைவானை ஆக்கிரமிக்க சீனா இராணுவ நடவடிக்கை எடுத்தால், அதில் அமெரிக்கா தலையிடும் அபாயம் உள்ளது. பதற்றமான சூழல் இதனால் தைவானில் எப்போதும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.



இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி, கடந்த ஆகஸ்டு மாதம் தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். 



இதை சீனா வன்மையாக கண்டித்தது. ஆனாலும் அமெரிக்கா மட்டுமின்றி, பிரான்ஸ், ஜப்பான் என பல நாடுகள் தங்கள் பிரதிநிதிகள் குழுவை தைவானுக்கு அனுப்பி வருவது சீனாவுக்கு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல இருக்கிறது.



இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தைவானை நோக்கி சீனா 23 போர் விமானங்களையும், 4 போர்க்கப்பல்களையும் அனுப்பி உள்ளது. இதனால் அங்கு புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தைவான் இராணுவ அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. 



இது குறித்து தைவான் இராணுவ அமைச்சு டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:



சீனாவின் 23 போர் விமானங்கள், 4 போர்க்கப்பல்கள் தைவான் சுற்றுப்புறங்களில் இன்று காலை 6 மணி வரை கண்டறியப்பட்டள்ளன. இரண்டு 'ஜே-11' போர் விமானங்கள், எட்டு ஜே-16 போர் விமானங்கள், மூன்று எஸ்யு-30 போர் விமானங்கள் உள்ளிட்ட 17 சீன போர் விமானங்கள், ஒரு பிஇசட்கே-005 டிரோன் தைவான் ஜலசந்தியின் இடைநிலைக்கோடு பகுதியை கடந்தன.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தைவான் பதிலடியாக, நிலைமையைக் கண்காணிக்க வான் மற்றும் கடல் ரோந்துகளை வலுப்படுத்தியுள்ளது. தவிரவும், நிலத்திலும் ஏவுகணை அமைப்புகளை நிறுவி இருகிறது என தகவல்கள் கூறுகின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »