தகனசாலையில், சடலமொன்று எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்த போது காஸ் தீர்ந்துவிட்டதால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான, கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள தகனசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்த தமது உறவினரின் சடலத்துடன் உறவினர்கள் இன்று (13) பகல் 1 மணியளவில் தகனசாலையை வந்தடைந்தனர். அதற்கான கட்டணமான 24,850 ரூபாயை உறவினர்கள் ஏற்கெனவே செலுத்தியும் இருந்தனர்.
சடலத்தை எரியூட்டிக்கொண்டிருந்த போது காஸ் தீர்ந்துவிட்டதால், உறவினர்கள் குழம்பிவிட்டனர். “காஸ் தீர்ந்துவிட்டது. நான் வாங்கி வரும் வரையில் இவ்விடத்திலேயே இருக்கவும்” என அங்கு பணியாற்றும் ஊழியர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊழியருக்கும் உறவினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இரண்டு மணிநேரத்துக்குப் பின்னரே, கொட்டகலை பிரதேச சபையின் லொறியில் காஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வரப்பட்டது. அதுவரையிலும் காத்திருந்த உறவினர்கள், லொறியின் சாரதியுடனும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
முறையாக கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதால், பிரதேச சபை எதற்கும் தயாராகவே இருக்கவேண்டும் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.