நிலநடுக்கம் ஏற்பட்ட புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளில் இன்று (12) கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (10) புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு அருகில் ரிச்டர் அளவுகோலில் 3.5 மற்றும் 3 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து நேற்று (11) காலை வெல்லவாய பிரதேசத்தில் 2.3 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கங்கள் தீவிரமானவை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் இரண்டு குழுக்கள் நேற்று அந்தப் பகுதிக்கு களப்பயணம் மேற்கொண்டதுடன், இன்றும் அதே நடவடிக்கைகளைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் நேற்றைய தினம் அந்தப் பிரதேச மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றதாகவும், இன்றைய தினம் மேலதிக தகவல்களை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இந்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், அது தொடர்பான அறிக்கை அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.