கிழக்கு ஆசிய நாடான வடகொரியா அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை விரும்பாத அமெரிக்கா, பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகளை அச்சுறுத்தும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளை மீறி தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகின்றது.
அதிலும் அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை அவ்வப்போது சோதித்து அமெரிக்காவை அதிரவைத்து வருகின்றது. கொரிய தீபகற்பத்தில் பதற்றம் இந்த சூழலில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக மேற்கொள்ளப்படும் வருடாந்திர கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடந்த வாரம் அறிவித்தன.
இதனால் கடும் கோபமடைந்த வடகொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கினால் இருநாடுகளும் முன்னொப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடியை சந்திக்கும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.
அதோடு நிறுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இராணுவம் கணினி மயமாக்கப்பட்ட கூட்டுப்பயிற்சியை நேற்று வாஷிங்டனில் தொடங்கின.
இதற்கு பதிலடி தரும் விதமாக வடகொரியா நேற்று ஒரே நாளில் 4 தொலைதூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்தது அதிரவைத்தது.
இது குறித்து வடகொரியாவின் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டின் வடக்கு பகுதியில் ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள கிம் சேக் நகரில் இருந்து 'ஹவாசல்-2' ஏவுகணைகள் 4, கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலை நோக்கி ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பறந்து, 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கின' என கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், 'இன்றைய ஏவுகணை சோதனைகள் வடகொரியாவின் அணு ஆயுத படைகளின் போர்த் தயார்நிலையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளன.
மேலும் அவை எதிரி படைகளுக்கு எதிரான கொடிய அணுசக்தி எதிர்த் தாக்குதல் திறன்களை வலுப்படுத்துகின்றன' எனவும் அதில் கூறப்பட்டள்ளது. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் குறித்து முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை என்றும் அமெரிக்காவுடன் இணைந்து இதுப்பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உணவு பற்றாக்குறைக்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.