இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறக்கும் போது அவருக்கு வயது 45.
இவர் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராவார்.
சம்பவம் தொடர்பில் ஜகார்த்தா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒனேஷ் சுபசிங்க தனது பிரேசிலிய மனைவி, நான்கு வயது மகள் மற்றும் மற்றொரு அறியப்படாத பிரேசிலியப் பெண்ணுடன் விடுமுறைக்காக ஜகார்த்தா சென்றிருந்தார்.
ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி, மகள் மற்றும் குறித்த பெண் ஆகியோர் கடந்த 2ஆம் திகதி அடுக்குமாடி குடியிருப்பின் பிரதான கதவில் "தொந்தரவு செய்யாதீர்கள்" என்ற பலகையை பொருத்தி விட்டு வெளியேறும் காட்சி சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி ஒனேஷ் சுபசிங்க தனது குடும்பத்தினருடன் இறுதியாக தொடர்பை ஏற்படுத்தி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சும் ஜகார்த்தாவில் உள்ள இலங்கை தூதரகமும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.