சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி
வீரர்கள் திரும்புவதற்கான விண்கலம் சிறிய விண்கல் மோதல் காரணமாக சேதமடைந்துள்ளதால், ரஷ்யா அனுப்பிய அவசர மீட்பு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது.சோயுஸ் எம்எஸ்-23 எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், கஸகஸ்தானின் பய்கனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலைய பங்காளரான அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதனை நேரடியாக ஒளிபரப்பியது.
இவ்விண்கலம் நேற்றுஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. எனினும், சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள 3 வீரர்களும் பூமிக்குத் திரும்புவது எதிர்வரும் செப்டெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிராங்க் ரூபியோ மற்றும் ரஷ்யாவின் திமித்ரி பீட்லின், சேர்ஜி ப்ரோகோப்யேவ் ஆகியோர் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர்.
இவர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் எம்-எஸ்22 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். 6 மாத காலம் தங்கியிருந்த பின் எதிர்வரும் மார்ச் மாதம் அவர்கள் பூமிக்குத் திரும்பவிருந்தனர்.
ஆனால், அவர்கள் பூமிக்குத் திரும்புவதற்கான விண்கலத்தில் கடந்த டிசெம்பர் 14 ஆம் திகதி கூலன் கசிவு ஏற்படத் தொடங்கியது. சிறிய விண்கல் ஒன்று தாக்கியமையே இதற்குக் காரணம் என அமெரிக்க, ரஷ்ய விண்வெளித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
தற்போது விண்வெளி நிலையத்திலுள்ள 3 வீரர்களுக்கும் மாற்றீடாக இரு வீரர்களுடன் மார்ச் மத்தியில் எம்எஸ்23 விண்கலம் அனுப்பப்படவிருந்தது.
ஆனால், எம்எஸ்22 விண்கலத்தில் சேதம் ஏற்பட்டதால், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திருள்ள மூவரும் எதிர்வரும் செப்டெம்பர் வரை தொடர்ந்தும் அங்கு தங்கியிருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வீரர்கள் மூவருடன் இலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ட்ரகன் எனும் தனியார் விண்கலம் மூலம் கடந்த ஒக்டோபரில் அனுப்பப்பட்ட மேலும் நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர்.
இந்நால்வரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கும், 2 அமெரிக்கர்கள், ஒரு ரஷ்யர், ஒரு ஐக்கிய அரபு இராச்சிய விண்வெளி வீரர் உட்பட நால்வரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கும் ஸ்பேஸ் எக்ஸ் ட்ரகன் விண்கலமொன்று இன்று திங்கட்கிழமை விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது.