கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரணாகொடவை படுகொலை செய்வதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வசந்த கரணாகொட பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.
வசந்த கரணாகொடவின் அனைத்து செயற்பாடுகளையும் அவதானித்து மர்ம நபர்களால் காணொளி எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தொடர்பில் வசந்த கரணாகொடவிற்கு தகவல் தெரிநிதுள்ளது.
இந்த காணொளிகளை பார்க்கும் போது அவை கரணாகொடவை குறிவைத்து எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகியுள்ளதுடன், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த காணொளிகள் கரணாகொடவின் குருநாகல் வீட்டுக்கு அருகில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு ஏற்பட்டுள்ள மிரட்டல் குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதில் அரசியல் தலையீடு உள்ளதா என ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பல தொலைபேசி அழைப்புகள் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையை கருத்தில் கொண்டு ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.