(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகல தீர்மானங்களுக்கும் எம்மால் ஆதரவளிக்க முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தில் கூட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கப்படாத நிலையில், தற்போது அதற்கு முக்கியத்துவமளிப்பதற்கான காரணி தொடர்பில் ஆராய வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மேலும் பொதுஜன பெரமுன அதிகார பகிர்வை எதிர்க்கும் கட்சியல்ல. ஆனால் அதிகார பகிர்வு இன, மத, மொழி ரீதியில் வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பொதுஜன பெரமுன அதிகார பகிர்வை எதிர்க்கும் கட்சியல்ல. ஆனால் அதிகார பகிர்வானது இன ரீதியாகவோ , மொழி ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ வழங்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். அதிகாரம் பகிரப்பட வேண்டியது மக்களுக்காகும்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் 35 ஆண்டுகளாக எமது அரசியலமைப்பில் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில் ஆட்சி செய்த 7 ஜனாதிபதிகளில் எவருமே 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எண்ணவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் கூட இவ்வாறானதொரு முயற்சி முன்னெடுக்கப்படவில்லை.
எனவே கடந்த காலங்களில் ஏன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தொடர்பில் ஆராய வேண்டும். எம்மால் உடன்படக் கூடிய விடயங்களில் மாத்திரமே நாம் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்போம்.
ஜனநாயகம் , இறையாண்மையைப் பாதுகாத்தல் மற்றும் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தல் என்பவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கே நாம் பிரதானமாக எமது ஒத்துழைப்பினை வழங்குவதற்கு இணங்கியுள்ளோம்.
எனவே ஆரம்பத்திலேயே இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களைத் தவிர , ஜனாதிபதி கூறும் அனைத்து விடயங்களுக்கும் எம்மால் ஆதரவளிக்க முடியாது என்றார்.