இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டிற்கும், எதிர்கட்சிகளிலுள்ள சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இனப் பிரச்சினை தொடர்பான நல்லிணக்கத்தின் நம்பிக்கை மற்றும் அரசியல் தீர்வுகள் குறித்து இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
சிறுபான்மை அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எவ்வாறு அமெரிக்கா உதவலாம் என்பது குறித்தும், அதிகார பகிர்வு, நல்லிணக்கம் குறிக்கும் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (பெப்.01) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கடந்த ஆண்டில் மாத்திரம் 240 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையின் வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் தொடர்பிலும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்தும் மிக ஆழமான கலந்துரையாடப்பட்டுள்ளது.