Our Feeds


Friday, February 10, 2023

ShortNews Admin

ஒரு பகுதி மக்களுக்கு அநீதி இழைக்கும் விடயத்தை தேரர்களால் எவ்வாறு போதிக்க முடியும்? - மகாநாயக்க தேரர்களுக்கு விக்னேஸ்வரன் கடிதம்



13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எண்ணமே நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மையற்ற நிலையை தோற்றுவித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

13 ஆவது திருத்தம் தொடர்பில் மூன்று பீடங்களினதும் நான்கு மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.

 

குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள் காட்டி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் C.V. விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரர்களுக்கு பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன், அதில் பல விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.

 

அகிம்சை என்பது இந்து, பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் முக்கிய கோட்பாடு எனவும், ஒரு பகுதி மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விடயத்தை தேரர்களால் எவ்வாறு போதிக்க முடியும் எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் மகாநாயக்க தேரர்களிடம் வினவியுள்ளார்.

 

அத்துடன், தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் 3000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் C.V. விக்னேஸ்வரன், இலங்கையின் புராதன வரலாற்றை உத்தியோகபூர்வமாக எழுதுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் இந்திய, சர்வதேச வரலாற்றாசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதியை கோருமாறும் மகாநாயக்க தேரர்களை வலியுறுத்தியுள்ளார்.

 

மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் பட்சத்தில், அனைத்து மாகாண சபைகளும் பிரிவினையைக் கோரும் என கருதுகின்றீர்களா? என தனது கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ள C.V. விக்னேஸ்வரன், சுவிட்சர்லாந்தில் 20 உபபிரிவுகள் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதற்கமைய, சுவிட்சர்லாந்தை போன்று அனைத்து மாகாணங்களும் சுதந்திரமாகவும் தனித்தனியாகவும் செயற்படுவதற்கு அனுமதிக்கின்ற முறைமையை இலங்கையும் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »