(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
முஸ்லிம்கள் மீதான குரோதமே முஸ்லிம்களுடைய கொரோனா ஜனாசாக்களை ராஜபக்ச அரசாங்கம் எரித்தமையாகும் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடத்திய கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு காத்தான்குடி ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், முஸ்லிம் மக்களின் கொரோனா ஜனாசாக்களை வலுக்கட்டாயப்படுத்தி அன்று எரித்தார்கள். முஸ்லிம்களுடைய கொரோனா ஜனாசாக்களை எரித்தமைக்கு விஞ்ஞான நோக்கங்களோ வைத்தியர்களுடைய சிபாரிசுகளோ இல்லை. அவர்களுடைய உள்நோக்கம் முஸ்லிம்கள் மீதான குரோதமாகும்.
ஜனாசா எரிப்பு விடயத்தில் ராஜபக்சவுக்கு சமயத்தை, மதத்தை காட்டிக் கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.
நான் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது இந்த மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அடிக்கடி வந்ததுள்ளேன். வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் முடிந்த வீட்டுத்திட்டங்களை மக்களுக்கு கையளித்தேன். ஆனால் என்னால் காத்தான்குடிக்கு வரமுடியாமல் போய் விட்டது. அதற்கான காரணம் இந்த காத்தான்குடிப் பகுதியில் காணிக்கான தட்டுப்பாடு அதிகமாக காணப்படுகின்றது.
நான் நினைக்கின்றேன். காத்தான்குடியில் ஒரு வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வசிக்கின்றன. அதற்கு காரணம் காணியில்லாமையாகும். காணி இல்லாததால் எங்களால் வீடுகளை அமைத்துக் கொள்ள முடியவில்லை.
இதற்கான திட்டமொன்றை நாங்கள் வகுக்க வேண்டும். காணி இல்லாததால் தொடர் மாடி வீடுகளை அமைக்க முடியும். இந்தப் பகுதியிலுள்ள அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு முடிவை எடுத்து அந்த முடிவின் பிரகாரம் தொடர் மாடி வீட்டுத்திட்டத்தினை இங்கு அமைக்க முடியும் என்றார்.- Vidivelli