LTTE தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக
நேற்றைய தினம் பழ. நெடுமாறன் கூறிய கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுத்துள்ளார்.பழ.நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது அரசியல் களத்தை விவாதிக்க வைத்துள்ளது. அதேவேளையில் பழ.நெடுமாறன் கூறியது உண்மையில்லை என இலங்கை ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பாலசந்திரனை இறக்கக் கொடுத்துவிட்டு அவர் பத்திரமாகத் தப்பி இருப்பார் என நினைக்கிறீர்களா. எந்த சூழலிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என வீரமாக சண்டை செய்தவர். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிப் போகிற கோழை என அவரை நினைக்கிறீர்களா? ஒரு பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு 15 ஆண்டுகள் பத்திரமாகப் பதுங்கி இருந்து எதையும் பேசாமல் இருப்பார் என நினைக்கிறீர்களா?
இரண்டாவது, சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன். வந்துவிட்டு சொல்லுவார். அதுதான் அவரது பழக்கம். அதை அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். சொல்லுக்கு முன் செயல் என்பதை எங்களுக்கு கற்பித்தவர். அதனால் தேவையில்லாமல் போட்டு குழப்பிக்கொண்டு இருக்கத் தேவையில்லை. மக்களுக்கு முன் தோன்றுவார் எனச் சொல்கிறார்கள். தோன்றும் போது பேசுவோம். ஐயா சொல்லுவது போல் அவர் நேரில் வந்துவிட்டால் அதன் பிறகு பேசுவோம்” எனக் கூறினார்.