மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சித்தாண்டி-02, பிரதான வீதியைச் சேர்ந்த சிவகுரு குமாரசாமி (47) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே பலியானவர் ஆவார்.
திங்கட்கிழமை (6) முற்பகல் 11.30 மணியளவில் தனது வீட்டு முற்றத்தில் நிற்கும் சுமார் 50 அடி உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்துவிட்டு, நோயாளியான தனது மனைவிக்காக இளநீரை பறிப்பதற்காக ஆயத்தமானபோது கால் வழுக்கி சடுதியாக நிலத்தில் விழுந்துள்ளார்.
தென்னை மரத்திற்கு அருகாமையில் உள்ள பலா மரக்கிளையையும் உடைத்துக்கொண்டு தனது தந்தை நிலத்தில் விழுவதை அவதானித்த மூன்று பிள்ளைகளும் (14 ,08 , 05 ) தந்தையை காப்பாற்ற அயலவர்களை சத்தமிட்டு அழைத்துள்ளதுடன் அவரை மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் மரணமடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீருடன் சம்பவ இடத்துக்கு சென்ற சந்திவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தென்னை மரத்திலிருந்து விழுந்து மரணித்தவரின் உடலின் வெளிப்புற பகுதிகளில் காயங்கள் ஏதுமில்லாததால், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பிரேத பரிசோதனை முடிவுற்றதும் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு, மரண விசாரணை அதிகாரி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.