கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையை ரத்துச் செய்யுமாறு கோரி – தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்த ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மனுவை நிராகரிப்பதற்கு எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.
முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு, தமழிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் உள்ளிட்ட மூவர் இந்த ‘ரிட்’ மனுவை தாக்கல் செய்தனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனுக்களை ஏற்குமாறு, தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் தமது மனுவில் கோரியிருந்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரேயா ஆகியோர் ஆஜராகினர்.
தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே, சட்டத்தரணி தர்ஷனி கலுபஹன மற்றும் உஷானி அதபத்து ஆகியோர் ஆஜராகினர்.