வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும் போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட 2023 பெப்ரவரி 22 ஆம் திகதி சுற்றறிக்கை பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் வணிக வகுப்பில் (Business Class) பயணம் செய்ய விரும்பினால், சாதாரண வகுப்பு விமான டிக்கெட்டின் விலைக்கும் வணிக வகுப்பு விமான டிக்கெட்டின் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை தனது தனிப்பட்ட பணத்திலிருந்து செலவழித்து வணிக வகுப்பில் பயணம் செய்யலாம்.
இந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கூறிய விதிகளுக்குப் புறம்பாக ஒரு விசேட காரணத்திற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி அதிகாரி ஒருவர் வணிக வகுப்பில் பயணிக்க விரும்பினால், அவர் தேவையான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதியின் செயலாளரின் முன் அனுமதியைப் பெற வேண்டும்.
குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் 2023 மார்ச் 01 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி இந்த விடயம் தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் அல்லது அறிவுறுத்தல் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், குறித்த திகதி முதல் செல்லுபடியாகாது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் காரணமாக அரசாங்கத்தின் நிதியை அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரம் மிகவும் சிக்கனமான முறையில் செலவிடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு இணங்க ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.