Our Feeds


Tuesday, February 7, 2023

ShortNews Admin

ஜனாதிபதியின் வரிக்கொள்கையை ஒருவருடத்துக்கு பொறுத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - ஐ.தே.க



(எம்.ஆர்.எம்.வசீம்)


நாட்டின் பொருளாதாரத்தை  கட்டியெழுப்ப எடுத்துவரும் முயற்சியை சீர்குலைப்பதற்கு திட்டமிட்டு வருபவர்களே சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி பறக்கவிடுமாறு மக்களை தூண்டி வந்தனர்.

நாடு அராஜக நிலைக்கு செல்வதற்கு பிரதானமாக செயற்பட்டு வந்ததும் இவர்களாகும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை (06)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாட்ட நிகழ்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வந்தன.

என்றாலும் இந்த போராட்டக்காரர்களுக்கு, அன்றைய தினம் மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல விடயங்களை நினைவுபடுத்தியிருந்தார். என்றாலும் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்லும் ஜனாதிபதியின் பயணத்தை தடுப்பதற்கு பலவேறு அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

இவ்வாறு நாட்டை சீர்குலைக்க முயற்சித்து வருபவர்களே, சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏந்துமாறு மக்களை தூண்டி வந்துள்ளனர். நாடு இந்த நிலைக்கு வங்குராேத்து அடைவதற்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் இவர்களாகும்.

இதன் மூலம் வெளிநாடுகளின் உதவியை தடுப்பதே இவர்களின் நோக்கமாகும். அதேபோன்று மீண்டும் மக்களை வீதிக்கி இறக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர்.

நாடொன்றின் சுதந்திர தின நிகழ்வின் போது இவ்வாறு மோசமாக செயற்படுபவர்களை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை.

அத்துடன் கறுப்புக்கொடி ஏற்றுமாறு கூறியவர்கள்தான் 88/89 காலப்பகுதியில் நாட்டை அராஜாகமாக்குவதற்கு பிரதானமாக செயற்பட்டவர்கள், இதற்கு மக்கள் விடுதலை முன்னணியே பொறுக்கூற வேண்டும்.

தற்போது தேர்தல் நடத்தாவிட்டால் பார்த்துக்கொள்ளலாம் என எச்சிரிக்கை விடுக்கின்றனர். நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுவந்தவர்களின் இறுதியிலேயே கோட்டாபய ராஜபக்ஷ் இணைந்துகொண்டார்.

அதேபோல் கிறிஸ்தவ மக்களும் கறுப்புக்கொடி ஏந்தி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. கிறிஸ்தவ மதத் தலைவர், நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ்வை அதிகாரத்துக்கு கொண்டுவர பாரியளவில் செயற்பட்டார்.

அந்த ஆட்சியாளரால் நாடு பின்னடைவுக்கு சென்றது. இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்ப தற்போதுள்ள ஆட்சியாளருக்கு உதவி செய்யாமல், நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல அவர் செயற்பட்டு வருகிறார்.

மேலும் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார் என்றால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியம். ஜப்பான், ஐராேப்பிய நாடுகள் எமக்கு உதவுவதற்கு முன்வரும்.

அதனால் எமது நாட்டை கட்டியெழுப்ப  தயார் என நாங்கள் அனைவரும் உலகுக்கு காட்டவேண்டும். அதேபோன்று ஜனாதிபதியின் வரிக்கொள்கை, உள்ளவர்களிடமிருந்து இல்லாதவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாகும். ஒருவருடம் பொறுத்துக்கொண்டு இதனை மேற்கொண்டால் எமக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »