Our Feeds


Monday, February 20, 2023

Anonymous

தமிழரசு கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதற்காக கூண்டோடு விட்டுக் கொடுத்து விலகிய ஹக்கீம் தலைமையிலான தராசு கூட்டணி - நடந்தது என்ன?

 



முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிட எடுக்கப்பட்டுள்ள தற்காலிக ஒன்றிணைவுத் தீர்மானம், நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


முஸ்லிம் – தமிழ் இனங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் கொள்கை வலுப்பெறும் என நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டார்.


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்ப்பு மனு நிராகரிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றை நாடியும் குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இதற்கான மாற்று வியூகம் ஒன்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமைத்து அது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது.


இதன்படி, ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியில் தராசு சின்னத்தில் போட்டியிட இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்வந்துள்ளது.


இந்நிலையில் குறித்த ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியின் உறுப்பினர்கள் இராஜினாமா செய்து இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றின் இணக்கப்பாட்டுடன் இந்த முடிவு எட்டப்பட்டு கரைதுறைப்பற்று பிரதேச சபையில் தராசு சின்னத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் களமிறங்குவதாக முடிவு எட்டப்பட்டுள்ளது.  


குறித்த கட்சியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்ட ஹிஜ்ராபுர வேட்பாளர் தவிர ஏனையவர்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழரசு கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கியதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற நீராவிப்பட்டி வேட்பாளர் உடைய ஏற்பாட்டில் நீராவிப்பிட்டி பகுதியிலே இன்று தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றும், கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தம் தொடர்பான விளக்கக் கூட்டமும் இடம்பெற்றது.


இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்னுடைய தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,  முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியினுடைய செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான துரைராசா ரவிகரன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் நஜீத் மற்றும் கரைத்துறைபற்று பிரதேச சபை தேர்தலிலே இலங்கை தமிழரசு கட்சி சார்பிலே போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »