இஸ்ரேலுக்கும் , அரபு நாடுகளுக்கும் இடையே பல
ஆண்டுகளாக நிலவி வரும் மோதல் போக்கு மெல்ல மெல்ல தணிந்து வருகின்றது.அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், சூடான், மொராக்கோ போன்ற அரபு நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தமும் தூதரக உறவை தொடங்கவும் ஒப்பந்தம் செய்துகொண்டது.
இது இஸ்ரேல்-அரபு நாடுகள் இடையேயான உறவு சுமூகநிலைக்கு திரும்பும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது.
சவுதி அரேபியா தங்கள் நாட்டு வான்பரப்பு வழியாக இஸ்ரேல் விமானங்கள் செல்ல கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், சவுதியின் அண்டை நாடான ஓமானும் தங்கள் வான்பரப்பில் இஸ்ரேல் விமானங்கள் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இது ஓமானுடன் இஸ்ரேல் தூதரக ரீதியில் சுமூக உறவை தொடங்க எடுக்கப்படும் முன்னெடுப்பாக கருத்தப்படுகின்றது.
தங்கள் வான்பரப்பை இஸ்ரேல் விமானங்கள் பயன்படுத்த ஓமான் அனுமதி வழங்கியுள்ளதால் இனி இஸ்ரேல்-இந்தியா இடையேயான விமான போக்குவரத்து பயண தூரம் சுமார் 2 மணி நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள ஓமான் அனுமதியளித்ததால் இஸ்ரேல் ஆசிய நாடுகள் இடையேயான விமான போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.