மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள் ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி தேசிய ரீதியான ஒரு கட்சியை உருவாக்கும் முனைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருவதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரசாங்கத்தில் பிரதானமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகொள்ளும் முனைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுதிபூண்டுள்ளதோடு, அதற்காக ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணி யொன்றை உருவாக்கும் முயற்சியும் தற்போது இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. இவ்வாறான கூட்டணியொன்றை அமைத்தால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மாத்திரமன்றி மாகாண சபைத் தேர்தலையும் இலகுவாக வெற்றிகொண்டு பொருளாதாரத்தை திட்டமிட்ட வாறு தமது கொள்கைகளில் பயணிக்க முடியுமென ஜனாதிபதி நம்புகிறார். அத்தோடு, பாராளுமன்றத் தேர்தலின்போது தனது தலைமையில் பலம்வாய்ந்ததொரு கூட்டணியொன்றின் ஆதரவையும் திரட்ட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இந்த திட்டத்தின் ஊடாக தற்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்தி, மொட்டு கட்சியின் உறவை கைநீட்டும் அளவில் பேணிக்கொண்டு முழுமையானதொரு ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் ஒரு ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் மாத்திரமே கிடைத்திருந்ததால் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையை விட கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையிலேயே ஜனாதிபதி அதிக நாட்டம் கொண்டுள்ளார்.
இதை கருத்திற்கொண்டே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து பாரிய கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளருடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை போன்று தனக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க வேண்டும் என்ற ஆசை இல்லை என்றும், அரசாங்கத்திற்கு வந்ததும் மேலும் சிலரை அழைத்து வர விரும்புவதாகவும், ஆனால் அதனை செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வர விரும்புவோரை அழைத்துக்கொண்டு நமது அரசியல் பயணத்தை தொடருவோம் என ஜனாதிபதியிடம் கூறியதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.