எமது பிரதேசத்திற்கும் முழு நாட்டிற்கும் நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்கோடு ஓட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினால் 2023.02.05ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் போதைப் பொருள் விற்பனை செய்வோர் பாவிப்போர் மற்றம் அதற்கு உடந்தையாக இருப்போரை தடுத்து போதைப் பொருளை முழுமையாக பிரதேசத்தில் இருந்து ஒழிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதற்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் எமது பிரதேசத்தை போதையற்ற பிரதேசமாக மாற்றுவோம் என்ற தொனிப்பொருளில் ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம்.றம்சின் தலைமையில் பிரகடனம் ஒன்றினை பிரதேச மக்கள் மத்தியில் வாசித்து துண்டு பிரசுரங்களாகவம் வினியோகித்தனர்.
அப்பிரகடனத்தில் போதைப் பொருள் விற்பனை செய்வோர் பாவிப்போர் மற்றும் அதற்கு உடைந்தையாக இருப்போரை தவிர்த்தல்.
போதையுடன் தொடர்புடையவர்களின் குடும்பங்களில் நிகழக்கூடிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் மரணம் தொடர்பான எந்தக் கடமையாக இருந்தாலும் அதிலிருந்து பொது மக்கள் விலகி இருப்பதோடு பள்ளிவாயலும் விலகியிருத்தல்.
போதை விற்பனையாளர்களையும் பாவிப்போரையும் அதற்கு உடந்தையாக இருப்போரையும் அடையாளம் கண்டு முறையான தரவுகள் சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்தல்.
பொலிஸாரினால் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாவனையாளர்கள் கைது செய்யப்படும் போது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸாரை வலியுறுத்தல்.
போதைப் பொருள் விற்பனையாளர்கள் பாவனையாளர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
போதைக்கு அடிமையானவர்களினதும் அவர்களது குடும்பத்தினரதும் நன்மைகள் கருதி அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் புனர்வாழ்வும் அளிக்க உரிய அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப் பொருள் விற்பனையாளர்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதிலும் அவர்களுடன் வியாபாரம் செய்யும் நடவடிக்கைகளையும் பொது மக்கள் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
போதை தொடர்பாக அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுடன் பாடசாலை மாணவர்கள் தொடர்பு கொள்வது அவர்களை சந்திப்பது அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வது போன்றவற்றை முற்றாக தடுத்தல்.
போதையுடன் தொடர்புடைய வெளி பிரதேச வாசிகள் சந்தேகத்திற்கு இடமாக எமது பிரதேசத்தினுள் அடையாளம் காணப்படுவார்களாயின் அவர்களை பிரதேச செயலகத்தின் ஊடாகவும் அவர்களது பள்ளிவாயல்கள் ஊடாகவும் தொடர்பு கொண்டு பொலிஸாரின் விசாரனைக்குற்படுத்தி சட்ட நடவடிக்கை எடுத்தல்.
போதைப் பொருள் பாவனை விற்பனைக்கு எதிராக கையெழுத்துப் பேரணி ஒன்றை நடாத்ததல்.
எமது மஹல்லாவில் அடையாளங்காணப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யும் இடங்களில் போதைப் பொருள் வாங்குவோரை குழுக்கள் அமைத்து தொடர்ச்சியாக கண்காணித்தல்.
எமது சமுகத்தில் போதைப் பொருள் பாவனை காரணமாக குடும்ப பிணக்குகள் ஏற்பட்டு கணவன் மனைவி பிரிந்த நிலையில் அதிகமான சிறுவர்கள் அனாதைகளாக விடுபட்டு மற்றவர்களின் தயவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் இவர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு எதிர்காலத்தில் போதைப்பாவனையாளர்களாக மாறுவதற்கு சந்தர்ப்பம் இருப்பதால் இவர்களுக்கு புனர்வாழ்வழிக்க புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்தல்.
எமது மஹல்லாவிற்குள் காணப்படும் பொது இடங்களில் மாலை 06.00 மணிக்கு பின்னால் இளைஞர்கள் ஒன்றுகூடி போதைப்பாவனையை ஊக்குவிப்பதை முற்றாக தடைசெய்ய நடவடிக்கை எடுத்தல்.
பாடசாலை இடைவிலகள் போதைப் பொருள் பாவனைக்கு ஒரு காரணியாக காணப்படுவதால் இப் பள்ளிவாயலினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மெல்லகற்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை தொடர்ச்சியாக நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மொத்தம் பதினைந்து கோறிக்கைகளை வாசித்து பிரகடனம் செய்யப்பட்டதோடு பொது மக்களுக்கு அது துண்டு பிரசுரமாகவும் வழங்கப்பட்டது.