அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத் தலைநகரான சியாட்டில், சாதிய ரீதியான பாரபட்சங்களை தடை செய்துள்ளது. இதற்கான தீர்மானம் சியாட்டில் மாநகர சபையில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது.
இத்தடைக்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
அமெரிக்காவில் சாதிப் பாகுபாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்த முதலாவது நகரம் சியாட்டில் ஆகும்.
சியாட்டில் மாநகர சபையின் இந்திய அமெரிக்க அங்கத்தவரான ஷாமா சாவந்த் இதற்கான பிரேரணையை முன்வைத்தார்.
இந்த வெற்றியை அமெரிக்கா முழுவதும் பரப்புவதற்கான இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வாக்கெடுப்பின் பின்னர் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் பிரமாணக் குடும்பத்தில் தான் வளர்க்கப்பட்டபோதிலும், சாதிப் பாகுபாடுகளை தான் கண்டுள்ளதாக முன்னர் அவர் கூறியிருந்தார்.
தெற்காசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களால் அமெரிக்காவுக்கு சாதிப் பாகுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட Cisco நிறுவனம் சாதிப் பாகுபாடு தொடர்பான வழக்கு ஒன்றை எதிர்கொண்டுள்ளது. தனது சாதி காரணமாக தான் பாரபட்சமாக நடத்தப்பட்டதாகக் கூறி முன்னாள் ஊழியர் ஒருவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
இந்நிலையில், "வொஷிங்டன் மாநிலத்தில் 167,000 தெற்காசியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் சியாட்டில் பெரும்பாகப் பிராந்தியத்தில் வசிக்கின்றனர். இந்நிலையில், சாதிப் பாரபட்ச விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்" எனவும் ஷாமா சாவந்த் கூறியுள்ளார்.
அமெரிக்க தலித் அமைப்புகள் இத்தடையை வரவேற்றுள்ளன.
தலித் உரிமைகள் அமைப்பொன்றின் பணிப்பாளரான தேன்மொழி சௌந்தரராஜன் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், 'நாட்டில் முதலாவதாக, சியாட்டில் நகரம் சாதிப் பாகுபாட்டை தடை செய்ததன் மூலம், வெறுப்புணர்வை அன்பு வென்றுவிட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இந்து மன்றம் இத்தடை தொடர்பில் அதிருப்தி தெரிவித்துள்ளது.
'சாதிப் பாரபட்சங்கள் தவறானவை. ஆனால், சியாட்டில் நகரின் நடவடிக்கை தெற்காசிய சமூகத்தினரை தனிமைப்படுத்துகிறது' என அம்மன்றம் கூறியுள்ளது.