Our Feeds


Sunday, February 19, 2023

Anonymous

மோசமான பயங்கரவாத இயக்கத் தலைவரான பிரபாகரனை மண்டேலா, காந்தியுடன் ஒப்பிட முடியுமா? - பிரபாகரன் செத்து விட்டார் - ராஜாங்க அமைச்சர் பிரமித்த

 



(ஆர்.ராம்)


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

பிரபாகரனை, நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தியுடன் ஒப்பீடுசெய்து நலமுடன் இருப்பதாக திட்டமிட்ட பிரசாரமொன்றே தமிழ் நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படுவதால் அதுபற்றி அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு உள்ளார் என்று மீண்டும் மீண்டும் ஊடகங்களில் தெரிவித்து வருவதோடு, இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பொய்யுரைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், தெரிவிக்கையில், 

உலகளாவிய ரீதியில் உள்ள மோசமான பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக விடுதலைப்புலிகளின் இயக்கம் காணப்பட்டது. அவ்விதமான இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர் பிரபாகரன். 

அவ்வாறானவரை நெல்சன் மண்டேலாவுடனோ, மகாத்மா காந்தியுடனோ ஒப்பீடு செய்ய முடியாது. அவ்வாறு ஒப்பீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. 

இந்நிலையில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அண்மைய நாட்களில் ஒரு திட்டமிட்ட பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அதுபற்றி நாம் அதிகளவில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. 

போரின் போது பிரபாகரனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் படைகளின் பிரதானிகள் மிகத்தெளிவாக கூறியுள்ளனர்.

அவ்வாறான நிலையில் அவர்களின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு நாம் மீள்பரிசீலனைகள் செய்ய வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. 

அத்துடன், பிரபாகரனின் மரணம் சம்பந்தமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் ஆதாரங்களையும் படையினர் கொண்டிருக்கின்றார்கள். எனவே, ஒருசில நபர்களின் கருத்துக்களால் குழப்பமடைய வேண்டியதில்லை என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »