சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் பர்கான் அல் சவுத் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து 40 கோடி அமெரிக்க டொலர் உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
போரில் ஏற்கனவே உக்ரைனுக்கு ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியிலும் ஆயுதங்களை வழங்கியும் ஆதரவு தெரிவித்து வருகின்றது.
இதில் வளைகுடா நாடுகளில் ஏற்கனவே சவுதி அரேபியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்துள்ளார்.
மேலும், உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் அனைத்து விதமான முயற்சிகளும் தொடரப்படும் என அறிவித்தார்.
தற்போது சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் பர்கான் அல் சவுத் உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு கீவ் நகரில் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிறகு ஜனாதிபதி முன்னிலையில் உக்ரைன் நாட்டுக்கு மனிதாபிமான மற்றும் பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் பர்கான் அல் சவுத் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரிய் எர்மேக் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதில் சவுதி அரேபியா சார்பில் உக்ரைனுக்கு 40 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.