கடந்த ஆண்டு மே மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தனது கடமைகளை புறக்கணித்துள்ளார் என, கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட தலைமையிலான 3 பேர் கொண்ட குழு தீர்மானித்துள்ளது.
மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோரைக் கொண்ட குழு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.
சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு எதிராக தமது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குழுவின் பரிந்துரைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) விசாரணை நடத்த வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.