மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் மெர்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கொவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.
வெளவால்களிலிருந்து பரவும் மெர்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதுடன், மிகவும் ஆபத்தான நோய்க் கிருமியாகும். இது கடுமையான காய்ச்சலை அடிக்கடி இரத்தப்போக்குடன் ஏற்படுத்துகிறது.
மேலும் பல உறுப்புகளை பாதிப்படைய செய்து, உடலின் செயல் திறனைக் குறைக்கிறது.
இதுவரை 16 பேருக்கு அறிகுறிகள் பதிவாகியுள்ளன. மேலும் பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இது பிலோ வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இதில் எபோலா வைரஸும் அடங்கும். இந்த நிலையில், தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு மெர்பர்க் கிருமியின் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மெர்பர்க் வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த வித சிகிச்சையோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.