(எம்.மனோசித்ரா)
இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.
நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் , முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது பெரும்பாலானோரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சுதந்திர தின நிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. எனினும் அவ்விருவரும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
எனவே இம்முறை சுதந்திர தின நிகழ்வு முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் பங்குபற்றாத நிகழ்வாக அமைந்துள்ளது.
இதே வேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அந்த அழைப்பினை நிராகரித்துள்ளார்.
இதே போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.