(எம்.வை.எம்.சியாம்)
பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோரதுடுவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் முகப்புத்தக (பேஸ்புக்) நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றின் சுற்றிவளைப்பில் 31 ஆண்களும், 10 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட நிகழ்வொன்று நடைபெறுவதாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது கஞ்சா வைத்திருந்த 8 ஆண்களும் 2 பெண்களும், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பெண் ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்திற்கு அமைவாக 2 பேரும், மேலும் களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 21 ஆண்களும் 8 பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெஹிவளை, காலி, கலகெடிஹென, பலாங்கொடை, இரத்தினபுரி, கல்கிஸ்ஸ, ஹெட்டிமுல்ல, கொழும்பு 15 மற்றும் களனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.