ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில், நான்காவது முறையாக இன்று இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த அமர்வு, எதிர்வரும் 3ம் திகதி வரை இடம்பெறுகிறது.
ஏற்கனவே இந்த செயற்குழுவில் இலங்கையின் மனித உரிமை மதிப்பாய்வுகள், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையின் கீழ் 2008 மே, 2012 ஒக்டோபர் மற்றும் 2017 நவம்பர் ஆகிய வருடங்களில் இடம்பெற்றன.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முன்னேற்ற அறிக்கை, சிறப்பு நடைமுறைகள், மனித உரிமைகள் உடன்படிக்கை அமைப்புகள் மற்றும் பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் என அறியப்படும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக்கைகளில் உள்ள தகவல்கள், தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள், பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் உட்பட பிற பங்குதாரர்களால் வழங்கப்படும் தகவல்கள் என்பன இந்த கலந்துரையாடலின் போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.
ஜெனீவாவில் இன்று முற்பகல் 9 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு முன்கூட்டிய பதிவு செய்யப்பட்ட காணொளி ஊடாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.
அல்ஜீரியா, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மீளாய்வுக்கான அறிக்கையாளர்களாக பணியாற்றவுள்ளனர்.
இந்தநிலையில் மதிப்பாய்வுக்கான இறுதி நாளான பெப்ரவரி 3ஆம் திகதியன்று இலங்கைக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால ஆய்வு செயற்குழு நிறைவேற்றவுள்ளது. அத்துடன் தமது கருத்துக்களையும் வெளியிடவுள்ளது.