Our Feeds


Friday, February 3, 2023

ShortNews Admin

தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் செலவு செய்த நிதி தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் - சமன் ஸ்ரீ ரத்நாயக்க



(இராஜதுரை ஹஷான்)


உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளருக்கு 20 ரூபாவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒரு தேர்தல் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 20 ரூபாவால் பெருக்கி வரும் தொகையில் 60 சதவீதத்தையும் செலவிட வேண்டும்.

தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலுக்கு செலவு செய்த நிதி தொடர்பான தகவல்களை தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

பொய்யான தகவல்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் தேர்தலில் வெற்றிப் பெற்றவரின் அரசியல் பதவி இரத்து செய்யப்படும்,தோல்வியடைந்தவர் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1974 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் வழிமுறை காணப்பட்டது.தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு வேட்பாளர் தேர்தல் வெற்றிக்காக எவ்வளவு செலவு செய்யலாம் என்ற நிலை காணப்பட்டது.விருப்பு வாக்கு முறைமை தேர்தல் செலவுகளையும்,அரசியல் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

விருப்பு வாக்கு முறைமையினை கொண்டு ஒரு வேட்பாளர் அதிக நிதியை தேர்தலுக்காக செலவு செய்கிறார்,இதனால் முறையற்ற அரசியல் நிர்வாக கட்டமைப்பு தோற்றம் பெறும்.தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சகல தரப்பினரும் வலியுறுத்தினர்.

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் தொடர்பாக சட்ட வரைபு 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை இருமுறை அனுமதி வழங்கியது, இருப்பினும் பல்வேறு காரணிகளினால் நிறைவேற்றப்படவில்லை. 

அரசியல் நிலைமை குறித்து நாட்டு மக்கள் முழுமையாக கவனம் செலுத்தியுள்ள பின்னணியில் குறுகிய காலத்திற்குள் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடந்த மாதம் 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் உருவாக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் தேர்தல் செலவுகள் தொடர்பான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும் என்ற திருத்தம் சட்டத்தில் உள்வாங்கப்பட்டது.

இதற்கமைய கடந்த மாதம் 24 ஆம்  25 தேர்தல் நிர்வாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடந்த மாதம் 24 திகதி 339 சுயேட்சை வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.அன்றைய தினம்அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல் தலைமையகத்தில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 300 ரூபா செலவு செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஒரு வேட்பாளர் வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபா செலவு செய்ய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்,இந்த தீர்மானத்தை ஆணைக்குழு பரிசீலனை செய்து அந்த தொகையை 20 ரூபாவாக நிர்ணயித்தது.

இதற்கமைய ஒரு சுயேட்சை வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 20 ரூபா செலவு செய்ய வேண்டும், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒரு தேர்தல் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 20 ரூபாவினால் பெருக்கி, வரும் தொகையில் 60 சதவீதத்தை அந்த தேர்தல் தொகுதிக்காக செலவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பெறுபேறு வெளியாகி 21 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் தேர்தலுக்கு செலவான நிதி மற்றும் அந்த நிதியை திரட்டிக் கொண்ட விதம் தொடர்பான தெளிவான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.குறித்த தகவல்களை இலங்கை பிரஜைகள் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.

வேட்பாளர் ஒருவருக்கு அவரது அனுசரனையாளர்கள் செலவு செய்யும் நிதி தொடர்பில் குறித்த வேட்பாளர் பொறுப்புக் கூற வேண்டும்.

பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தால் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஒருவரின் அரசியல் பதவி பறிக்கப்படும்.அத்துடன் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர் செலவு தொடர்பில் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால் அவர் மூன்று வருடங்களுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்படும்.

போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் தேர்தலுக்காக செலவு செய்யும் நிதி,பிரசார நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும், சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் அங்கிகரிக்கப்பட்ட தனியார் கணக்காய்வு தரப்பினர் ஊடாக பரிசீலனை செய்யப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »