சீன வான்பரப்புக்குள் அமெரிக்காவின் பலூன்கள் பறந்துள்ளதாக சீனா இன்று கூறியுள்ளது. 2022 ஜனவரி முதல் 10 இற்கும் அதிகமான தடவைகள் அமெரிக்காவின் பலூன்கள் சீனாவின் வான்பரப்பில் பறந்து என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் கூறினார்.
பெய்ஜிங் நகரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
சீனாவின் பலூன் ஒன்றை அமெரிக்க சுட்டு வீழ்த்திய நிலையில், சீனா இவ்வாறு கூறியுள்ளது.
'ஏனைய நாடுகளின் வான்பரப்பில் அமெரிக்கா சட்டவிரோதமாக நுழைவது அசாதாரணமானது அல்ல. கடந்த வருடத்தில் மாத்திரம் சீன அதிகாரிகளின் எந்தவொரு அனுமதியுமின்றி, அமெரிக்காவின் பலூன்கள் 10 இற்கும் அதிகமான தடவைகள் சீன வான் பரப்பில் பறந்துள்ளன' என அவர் கூறினார்.
அத்தகைய சட்டவிரோத நுழைவுகளுக்கு சீனா எவ்வாறு பதிலளித்தது என கேட்கப்பட்டபோது, சீனா அவற்றை பொறுப்புடனும் தொழிற்சார் தன்மையுடனும் கையாண்டது என அவர பதிலளித்தார்.
கடந்த 8 நாட்களில் 4 பறக்கும்பொருட்களை அமெரிக்கா சுட்டு வீழத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்குச் சொந்தமான 200 அடி உயரமான பாரிய பலூன் ஒன்றை கடந்த 4 ஆம் திகதி சௌத் கரோலினா மாநிலத்துக்கு அருகில் அமெரிக்கப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.
அதன்பின் அடையாளம் காணப்படாத மேலும் 3 பறக்கும் பொருட்களையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி, அலாஸ்கா மாநில வான்பரப்பில் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருளொன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது.
அதற்கு அடுத்த நாள் 11 ஆம் திகதி, கனடாவின் யுகோன் பிராந்தியத்தில், அமெரிக்க எல்லையிலிருந்து 160 கிலோமீற்றர் தூரத்தில் பறந்த பறக்கும் பொருளொன்று அமெரிக்க போர் விமானத்தின் மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது.
4 ஆவது பறக்கும் பொருள் மிச்சிகன் மாநிலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.