நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு – மக்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ள நிலையில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நாட்டிலிருந்து தப்பியோடி தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்த – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, பெரும் நிதியை அரசு ஒதுக்கியுள்ள நிலையில், அவர் சுகபோகமாக வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ புள்ளி விபரத் தகவல்களின் படி, 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபா கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஓய்வூதியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மற்றைய செலவுகள் எனும் தலைப்பில் கோட்டாவுக்கு 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ என்பதன் கீழ் – கோட்டாவுக்கு 10 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2023ல் வாகனங்களுக்காக மட்டும் 20 லட்சம் ரூபா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அரசின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வருகின்றார்.