சுதந்திர தினமன்று அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை நீக்குவதாக அறிவிக்க வேண்டும் இல்லையெனில் எதிர்வரும் 8ம் திகதி மாபெரும் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்வதாக வண. பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்திருந்தார்.
ஊடக சந்திப்பொன்றில் அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினால் இந்நாட்டில் அறுபதாயிரம் மக்களை பலியெடுத்ததை அநுர குமார ஒருநாளும் மறக்க வேண்டாம். ஹரிணி அமரசூரியவுக்கு அது பற்றி தெரியாது என்று நினைக்கிறேன். அவர் புதிதாக கட்சியில் சேர்ந்த ஒருவர். அவருக்கு அனுபவம் இல்லை என்பது எங்களுக்கு தெரியும். அவர் பத்திரிகை ஒன்றுக்கு 13ம் திருத்தம் நல்லது என்று தெரிவித்திருந்தார். அவரது அரசியல் நிலைப்பாடு அரசியல் அனுபவம் குறித்து எமக்கு சிக்கல்கள் நிறையவே உள்ளன.
நாம் கேட்கிறோம், ஜேவிபி இனது நிலைப்பாட்டையா ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்? அதனை அநுர குமார பொதுப் பிரசாரத்தில் தெரிவிக்க வேண்டும். அது உண்மை எனில் ஜேவிபி மீண்டும் பழைய பாதைக்கே செல்ல வேண்டியிருக்கும். அப்படியாயின் தேசிய அடையாளத்திற்கு சுதந்திரத்திற்கு விசேடமாக சிங்கள, தமிழ்,முஸ்லிம் மக்கள் இடையே உள்ள நல்லுறவை இல்லாமலாக்கி பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அறுபதாயிரம் பேரை பலி கொடுத்தது இதற்காகவா எனக் கேட்க விரும்புகிறோம்.
இந்தப் பிரிவினைவாதத்தினை உண்டாக்க முயற்சிக்கும் இந்த 13வது திருத்த சட்டத்தினை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், அதுவும் சுதந்திர தினமன்று 13வது திருத்தத்தினை நீக்குவதாக அறிவிக்க வேண்டும். அப்படியில்லாதவிடத்து அதற்கு எதிராக நாம் எதிர்வரும் 8ம் திகதி கொழும்புக்கு பெரும் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்வோம்..” எனத் தெரிவித்திருந்தார்.